சர்வதேச மந்தநிலை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் மற்றும் செலவினங்களை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. இவற்றில் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, நிறுவனத்தில் பல்வேறு சலுகைகள் நிறுத்தம் என்று பலவிதங்களில் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை என்றாலே பல்வேறு சலுகை, 6 மாதத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு, போனஸ், பார்ட்டி, டூர் என்று பல்வேறு வசதிகளை இளைஞர்கள் அனுபவித்து வந்த நிலை இனி இருக்காது என்று நிலை உருவாகியுள்ளது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் கொடுத்த வந்த சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஊழியர்கள் பயன்படுத்தி வந்த போக்குவரத்து வசதிகளை குறைத்து மிக குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே நிறுவனம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஊழியர்களுக்கு ஆகும் செலவுகளை குறைத்து வருகின்றன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்லும் படி வற்புத்துக்கின்றன. ஊழியர்களுக்கு கொடுக்கப்படிருக்கும் விடுப்பு நாட்களுக்கு குறைவாக ஊழியர் விடுப்பு எடுத்திருக்கும் பட்சத்தில் அந்த நாட்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுக்க வேண்டும். அத்தகைய மீதியுள்ள நாட்களை கட்டாய விடுப்பு எடுக்கும் படி நிறுவனங்கள் தற்போது நிர்பந்தனை செய்கின்றன. 2008 ஆண்டு முடியும் நேரத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை இரண்டு வார விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுப்பு நாட்களுக்கு ஊதியம் கிடையாது. போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்கு பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அகிலண்ட் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 1800 ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் கட்டாய விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. சென்னையிலும் பல ஐடி நிறுவனங்களில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 500 தாண்டியுள்ளது. இந்த பணி நீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது. புதிதாக ப்ராஜக்ட் கிடைக்காத காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்கள் சேர்ப்பதை தற்போது குறைத்துள்ளன. கட்டாய விடுப்பில் ஊழியர்கள் பலருக்கு விருப்பமில்லை என்றாலும், பலர் இதை எதிர்பார்த்து சந்தோசப்படுபவர்களும் உண்டு. குடும்பத்துடன் சில நாட்கள் சந்தோசமாக இருக்க முடியும் என்ற காரணமும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை நீக்காமல் கட்டாய விடுப்பு மூலம் சம்பள குறைப்பில் ஈடுபட்டால் ஊழியர்கள் ஏற்படும் பாதிப்பு அதிகபட்சம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment